அழிவை நோக்கியுள்ள புகளூர் கல்வெட்டுகள் சங்காலம் கோனார் கல்வெட்டு ஆதரம் கல்வெட்டுகள் பழங்கால வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக உள்ளன. இதற்குக் காரணம் கல்வெட்டுகளில் இடைச்செருகல்கள் இருக்க இயலாது என்பதே. சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுக்கையில் உள்ளது உள்ளபடி எனும் அளவிற்கு முழுமையான தகவல்கள் கிடைத்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால், கல்வெட்டுகளோ காலங்காலமாக தன் மீது செதுக்கப்பட்ட செய்திகளைச் செவ்வெனே தாங்கி நிற்கிறது. சில சமயங்களில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மெய்ப்பிக்கவும், பழங்கால எழுத்து வடிவங்களை அறியவும் கல்வெட்டுகள் துணை நிற்கின்றன.கரூர் மாவட்டம் புகளூரில் உள்ளது புகழி மலை. ஆறுநாட்டார் மலை என்றும் அழைக்கப்படும் இம்மலையில் உச்சியில் தமிழ் கடவுளான குமரனுக்குக் கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு கீழே தமிழுக்குப் புகழ் சேர்க்கும் கி.பி 1-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்னிரண்டு தமிழ் தொல் எழுத்து (பிராமி) கல்வெட்டுகள் உள்ளன. இங்கு ஒரே வம்சாவழியைச் சேர்ந்த மூன்று சேர மன்னர்களின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகளும், பொன் மற்றும் துணி வணிகர்கள் பெயர் கொண்ட கல்வெட்டுகளும், சங்ககாலப் பெயர்களான கொற்றன், கீரன், பிட்டன், ஓரி போன்ற பெயர்கள் கொண்ட கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றுள் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் காணப்படும் சேர மன்னர்கள் மூவரின் பெயர்கள் காணப்படுகின்ற கல்வெட்டு மிக முக்கியமான ஒன்று.கல்வெட்டுகள்: (படம்-1)மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன்கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் கடுங்கோன் ளங்கடுங்கோளங்கோ ஆக அறுத்த கல். இது ”ஆற்றூரைச் சேர்ந்த சமணப் பெரியவர் செங்காயபன் என்பவருக்கு சேர மன்னன் செல்லிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கடுங்கோன் இளவரசாக இருந்தபோது செதுக்கப்பட்ட கல்” என்ற செய்தியைக் காட்டும் கல்வெட்டு.”நலியூர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி”.இது ”நல்லியூர் பிட்டனின் இளைய பெண் கீரன் கொற்றி செய்வித்த பள்ளி” என்பதைத் தெரிவிக்கும் கல்வெட்டு. இவ்விதம் ஒவ்வொரு சமணப்படுகையின் பக்கவாட்டிலும், அதனை வழங்கியவரின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது.சமணப்படுகைகள் மழைச்சாரலில் நனையாமல் இருக்க படுகை அமைக்கப்பட்டுள்ள குகைகளின் விளிம்பில் முற்றமும் (படம்-2) மலையின் பின்பக்கமுள்ள சமணப்படுகைகளை அடைய சிறு நடைப்பாதையும்(படம்-6) செதுக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் முக்கியத்துவம் வாய்ந்த, சமணர்களின் பாதுகாப்பிற்காக செதுக்கப்பட்ட படுகைகள்(படம்-5) இன்று பாதுகாப்பின்றி அழிவை நோக்கியுள்ளன. காலத்தால் அழியாத கல்வெட்டுகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் அழிக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதுவே மக்களின் விழிப்புணர்வின்மை. இந்த சக்தியின் தாக்கத்திற்கு புகழி மலையும் உள்ளாகி வருகிறது. மலையின் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் உள்ள சமணப்படுகைகளுக்கு இட்டுச்செல்லும் வழி நெடுக இரும்பு வேலி போடப்பட்டுள்ளது, இந்த பாதுகாப்பு மட்டும் போதாது என்று நினைத்த மக்கள், சமீபத்தில் நடந்து முடிந்த கோவில் விழாவின்போது பிரசாதம் வழங்கப் பயன்படுத்தப்பட்ட தட்டுகளைக் குப்பையாய் குவித்துள்ளனர்.கல்வெட்டுகளிலுள்ள சமணத்துறவிகளின் பெயர்களோடு, மக்கள் தங்கள் வருகையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தங்களது பெயர்களையும் செதுக்கியுள்ளனர் (படம்-3,4). இதனால் எதிர்காலத்தில் கல்வெட்டுகள் முற்றிலுமாக படிக்க இயலாத நிலையை அடைந்துவிடும். இதனால் அக்கல்வெட்டுகளில் உள்ள வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்காமலே போய்விடும். இச்சமணப்படுகைக் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதன் வாயிலாக தங்கள் ஊர் சிறப்படையும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்தால் மட்டுமே அழிவுகளில் இருந்து கல்வெட்டுகளையும், அது வெளிப்படுத்தும் சிறப்புகளையும் காக்க இயலும். புதைந்திருக்கும் புராதானச் சின்னங்களை வெளிப்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதும் அவசியம் என்பதை யாவரும் உணரவேண்டும். இல்லையென்றால் நம் முன்னோரினை, அவர்களது சிறப்பினை அறிய நமக்கு கிடைத்த அரிய சான்றுகள் நம் எதிர்காலச் சந்ததியினருக்குக் கிட்டாமலே போய்விடும்.
Flash