மக்களை வழிநடத்தும் ஆயன் கோப்பெருஞ்சோழன்
கோப்பெருஞ்சோழன் எப்படிப்பட்டவன்?
புறநானூறு பாடல் விவரிக்கிறது 221-230 வரை
பாடுபவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொடுத்துப் பெற்ற புகழ்ஆடுபவர்களுக்களெல்லாம் கொடுத்துக் கொடுத்துப் பெற்ற அன்புஅறநெறி கண்டவர் புகழ்ந்த செங்கோல்திறனாளர்களெல்லாம் தேடிவந்து காட்டும் அன்புமகளிர் போன்ற மென்மைக் குணம்மைந்தர் போன்ற உடல் வலிமைகேள்வி என்னும் வேதநெறி மாந்தராகிய உயர்ந்தவர்களின் புகலிடம்
இப்படி விளங்கியவன் கோப்பெருஞ்சோழன்.
இத்தகையவன் என்று எண்ணிப்பார்க்காமல், வாழத் தகுதி வாய்ந்த ஒருவனைக் கூற்றுவன் கொண்டுசென்றான்.
அதனால் துன்புறும் உறவினர்ளே,
உண்மை பேசும் வாயினை உடைய புலவர்களே,
ஒன்று திரண்டு வாருங்கள்.
எல்லாரும் சேர்ந்து அந்தக் கூற்றுவனை வைதுத் தீர்க்கலாம்.
உலகமெல்லாம் ஒப்பாரி வைத்து அழும்படி (அரந்தை தூங்க) வைதுத் தீர்க்கலாம்.
கெடுதல் இல்லாத புகழைச் சூடிக்கொண்ட புரவலன் நடுகல்லாக இன்று ஆய்விட்டானே.
பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே;
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; 5
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத் தக்கோனை,
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்! 10
‘நனந் தலை உலகம் அரந்தை தூங்க,
கெடு இல் நல் இசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
கோப்பெருஞ்சோழன் நடுகல் கண்டு பொத்தியார் பாடியது.
காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு